ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைக் குறைக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வரைவு விதிகளைப் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை டிஜிட்டல் முறையில் அனுப்பும்போது, அந்தப் பணம் பெறுநரின் கணக்கிற்குச் சென்றடைய இனி ஒரு மணி நேரம் காலதாமதமாகும்.
இந்த ஒரு மணி நேர இடைவெளியானது, வாடிக்கையாளர்கள் தவறுதலாகவோ அல்லது மோசடி நபர்களிடம் ஏமாந்தோ பணத்தை அனுப்பினால், அந்தப் பரிவர்த்தனையை உடனடியாக ரத்து செய்ய அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு அவர்கள் நியமித்த ‘நம்பகமான நபர்’ ஒருவரின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. ஆபத்துக் காலங்களில் வாடிக்கையாளர்கள் தங்களின் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் உடனடியாக முடக்கும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வங்கிகள் தங்களின் கருத்துக்களை மே மாதம் 8-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது நடைமுறைக்கு வரும்போது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
