கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சி இரவு 7 மணிக்குமேல் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது ஏற்பாடுகளின் பாதிப்பால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரமான சம்பவம் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது எங்களை மிகவும் கலங்கச் செய்கிறது. 3 மாவட்ட ஆட்சியர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழுமையான ஆதரவுடன் நிற்கும்,” என தெரிவித்தார். மேலும், “இத்தகைய கூட்டங்களை த.வெ.க.வினர் திறம்பட ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம். கூட்டம் கட்டுக்கடங்காத அளவிற்கு திரளும்போது, தலைவர்கள் சரியான நேரத்தில் வருவது பாதுகாப்பு ரீதியாக முக்கியம்,” என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
