கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, நீதிமன்ற தலையீடு அவசியம் எனக் கூறி, தவெக கட்சி சார்பில் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பகுதியாக, இன்று சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்திற்கு, தவெக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அறிவழகன் மற்றும் CTR நிர்மல்குமார் நேரில் சென்று சந்தித்தனர். கூட்டநெரிசலில் பல உயிர்கள் பலியாகிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டு, நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில், அவற்றை அழிக்கவோ மறைக்கவோ யாரும் முயற்சிக்க முடியாத வகையில் நீதிமன்றம் உடனடியாக பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனு ஏற்கப்பட்டால், நாளை அல்லது நாளை மறுநாள் அவசர வழக்காக விசாரணைக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள் தவெக சார்பில் இழப்பை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.