மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், திருச்சியில் இருந்து மதுரை நோக்கி இன்று தனது ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்குகிறார். வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த எழுச்சிப் பயணத்தை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து தொடங்கி வைத்து சிறப்பிக்கிறார். திருச்சியில் நடைபெறும் இந்த விழாவில் கூட்டணிக் கட்சிகளின் பலத்தைக் காட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தோழமை கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியுள்ளது. மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், மிக முக்கியமான ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் வராதது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஒருவேளை தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறியால் கூட்டணிக்குள் ஏதேனும் விரிசல் ஏற்பட்டுள்ளதா? அதன் காரணமாகவே செல்வப்பெருந்தகை இந்த நடைபயணத்தைப் புறக்கணித்தாரா? என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
