தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் புழக்கம் குறித்து நடிகை கஸ்தூரி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகை கஸ்தூரி வெள்ளிக்கிழமை வருகை தந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வந்துள்ளேன். திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. ‘விடியல் தருவோம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் மக்களுக்கு இன்னும் விடியல் கிடைக்கவில்லை; அதனை எதிர்காலமாகவே வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்று பெயரெடுத்த நிலையில், அமைச்சர்களே ‘வடக்கன், பானிபூரி விற்பவர்’ என கிண்டலாகப் பேசி விஷத்தை விதைக்கிறார்கள். பிராமணர்களை ‘வந்தேறிகள்’ என்றார்கள், பின் இந்தி பேசுபவர்களைச் சொன்னார்கள், இப்போது பாஜக வந்துவிடும் என மிரட்டுகிறார்கள்.
திருத்தணியில் ஒரு முதியவர் அடித்துக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் வெளியே வராமலேயே பல நடக்கின்றன. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சாராயமும், போதைப் பொருளும் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் முதல்வர் ‘இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்’ என கூறி வருகிறார்.
தமிழகத்தில் மதுவிலக்குத் துறையைத் தவிர அனைத்துத் துறை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுவிலக்குத் துறையினர் மட்டும் ஏன் போராடவில்லை என்றால், அவர்களை அரசு போதையிலேயே வைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஒருமுறை சொன்னது போல, ‘கடவுள் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’ என்ற நிலைதான் இப்போது உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயர்தர ‘ஓ.ஜி’ வகை கஞ்சாக்கள் பிடிபட்டுள்ளன. ஆனால் அமைச்சர்களோ, ‘கஞ்சா செடி அங்கொன்று இங்கொன்று வளரத்தான் செய்யும்’ என அலட்சியமாகப் பேசுகிறார்கள். தமிழகத்தின் சூழலைப் பார்த்தால் அச்சமாக உள்ளது.
பாஜக – அதிமுக இணக்கமாகச் செயல்படுவதைப் பார்த்து அமைச்சர் உதயநிதி பொறாமைப்படுகிறார். மைனாரிட்டி வாக்குகளை நம்பித்தான் திமுக உள்ளது. மேலும், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து மாணிக் தாகூர் எம்பி பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மையான சேவை செய்யும் அமைப்புகள் மீது மஞ்சள் காமாலை கண்களோடு குற்றம் சாட்டுகிறார்கள். சொந்த கட்சித் தொண்டர் பூர்ண சந்திரன் மறைவுக்குக் கூட இரங்கல் தெரிவிக்காத திமுக, சேவையை பற்றிப் பேசுவது வேடிக்கை” என கஸ்தூரி தெரிவித்தார்.
