தமிழகத்தில் காலமுறை ஊதியம் மற்றும் முறையான ஓய்வூதியம் கோரி சத்துணவு ஊழியர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் நிர்வாகத் தோல்வியால் அரசுப் பள்ளி ஊழியர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காகத் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். ஏற்கனவே சத்துணவின் தரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்தப் போராட்டம் ஏழை மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், தமிழகப் பிள்ளைகள் தன்னை ‘அப்பா’ என்று அழைக்க வேண்டும் என விரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்தப் பிள்ளைகள் பசியால் வாடுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். அரசு உடனடியாகச் சத்துணவு ஊழியர்களை அழைத்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
