பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அவற்றை ஏலம் விட்டு அந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஷாஹீன் மாலிக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆசிட் வீச்சு என்பது வரதட்சணைக் கொடுமையால் ஏற்படும் மரணத்திற்கு இணையானது என்று குறிப்பிட்டனர். மேலும், இது தொடர்பான வழக்குகளின் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு அரசு செய்யும் உதவிகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதுடன், அவர்களின் சொத்துக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது குறித்தும் நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.
16 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு பெண்ணின் சட்டப் போராட்டத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உச்ச நீதிமன்றம் இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
