டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே, திங்கள்கிழமை மாலை 6.50 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்றும், 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிப்பால் அங்கிருந்த சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. வெடிகுண்டுக்கான குழிகளோ, அடையாளங்களோ சம்பவ இடத்தில் இல்லாவிட்டாலும், ஒரு சிறிய கார் வெடித்ததால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுவது சாத்தியமில்லை என்பதால், இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல் உயரதிகாரிகள் மற்றும் NIA அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுவரும் நிலையில், காவல்துறையின் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரை அடையாளம் கண்டுள்ளனர்.
அந்தக் கார் அரியானாவைச் சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், காரின் முன்னாள் உரிமையாளரான முகமது சல்மான் என்பவரும் குருகிராமில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
முன்னதாக, அரியானாவில் காஷ்மீர் மருத்துவர் ஒருவரிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததால், தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவத்திற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
