உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ‘ஆலன் ஹவுஸ்’ பள்ளியில், ஆசிரியர் ஒருவருக்கு ‘குட் மார்னிங்’ சொல்லவில்லை என்பதற்காக நான்காம் வகுப்பு மாணவர்கள் 25 பேரை ஆசிரியர் ரிஷப் என்பவர் இரண்டு மணி நேரம் தொடர்ந்து நிற்க வைத்து தண்டித்துள்ளார்.

மாணவர்கள் அழுதுகொண்டு நின்றிருந்தபோது, அந்த ஆசிரியர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாற்காலியில் அமர்ந்து செல்போன் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இடையில் பள்ளி முதல்வர் வந்து மாணவர்களை உட்காரச் சொன்ன போதிலும், அவர் சென்ற பிறகு மீண்டும் அந்த ஆசிரியர் மாணவர்களை நிற்க வைத்துத் துன்புறுத்தியுள்ளார்.

இந்தச் செயலால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால், அவர்களின் பெற்றோர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக மாணவர் ஒருவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குழந்தைகளைத் துன்புறுத்திய அந்த ஆசிரியரை உடனடியாக வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.