யூனிக் ஐடென்டிபிகேஷன் ஆஃப் இந்தியா (UIDAI) அமைப்பு, புதிய ஆதார் செயலியை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய செயலி அறிமுகமாகும் பிறகு, ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
இச்செயலியில் Face Authentication (முக அடையாளம்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இது, பயனாளரின் முகத்தை ஆதார் பதிவிலுள்ள முகவரிசியுடன் ஒப்பிட்டு உண்மைத்தன்மையை உறுதி செய்யும். கைரேகை மற்றும் கண்படங்கள் (iris) போன்ற பயோமெட்ரிக் விவரங்களை தேவைப்படும் சேவைகள் மட்டும் மையங்களில் தொடரும் என UIDAI தெரிவித்துள்ளது.
UIDAI தலைமைச் செயல் அதிகாரி புவனேஷ்குமார் கூறியதாவது, “Face Authentication தொழில்நுட்பம், இனி டிஜிட்டல் அடையாள சூழலின் முக்கிய கூறாக மாறியுள்ளது. இந்த செயலியின் மூலம், பயனாளர்கள் தங்கள் அடையாளத்தை UPI பேமெண்ட் போன்று எளிதாக பகிர முடியும். மேலும், பயனாளரின் தகவல்கள் முழுமையாக அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவை மாற்றப்படவோ, தவறாக பயன்படுத்தப்படவோ முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மூடப்பட்ட குழுவுடன் பீட்டா சோதனையில் உள்ள இந்த செயலி, AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில், தனியுரிமை முனைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் குழுக்கள் இந்த அறிவிப்பை வரவேற்று, “மையங்களில் நீண்ட வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டு, நேரம் சேமிக்கப்படும்” என பாராட்டுகின்றனர்.
இதேசமயம், மூத்த குடிமக்கள் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டில் பின்தங்கியவர்கள், பழைய முறைப்படி மையங்களுக்கு செல்வதையே விரும்புவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 1, 2025 முதல், பயோமெட்ரிக் தகவல் புதுப்பிக்கும் கட்டணம் ₹100-ல் இருந்து ₹125 ஆக உயர்கிறது. இது, 7 முதல் 15 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கும் பொருந்தும். அதேசமயம், 5–7 மற்றும் 15–17 வயதிலுள்ள குழந்தைகளுக்கான கட்டாய பதிவு மற்றும் புதுப்பிப்பு இலவசமாக வழங்கப்படும்.
myAadhaar போர்டல் வாயிலாக ஆவணங்களைப் புதுப்பிப்பது ஜூன் 14, 2026 வரை இலவசமாக தொடரும். மேலும், UIDAI தற்போது Google Maps-ஐ இணைத்து, ஆதார் மையங்களை எளிதாக கண்டறியும் வசதியையும் உருவாக்கி வருகிறது.
இந்த செயலியின் மூலம், அதிக பாதுகாப்பும், செயல்திறனும், அதேசமயம் பயனர் அனுபவத்திலும் எளிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
