ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் ஊதிய விஷயத்தில், தமிழக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒப்பந்த செவிலியர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மக்களின் உயிரைக் காக்கும் பணியில் இருக்கும் செவிலியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் சுரண்டுகிறது தமிழக அரசு,” என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “இலவசத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கும்போது, நாட்டு மக்களின் சுகாதாரத்தை காத்து பணியாற்றும் செவிலியர்களுக்கு உரிய ஊதியம் வழங்க முடியாதது ஏன்?” என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினர்.
மாநில அரசு தரப்பு, “மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை” என்ற விளக்கம் அளித்ததைக் குறித்து, “மாநில அரசின் பொறுப்பை மத்திய அரசின் மீது தூக்கிப் போட முடியாது” எனவும் உச்சநீதிமன்றம் கண்டித்தது. ஒப்பந்த செவிலியர்களின் சங்கம் வெளியிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உத்தரவிட்டு, இரு தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை பின்னர் விசாரிக்க ஒத்திவைத்தது.
