சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில், ரத்தக்கறையுடன் கூடிய ஒரு சாக்குமூட்டை கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த மூட்டையை மீட்டுப் பார்த்தபோது, அதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக இருந்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர்  சந்தானம் என்பதும், அவரை அவரது மனைவி அம்பிகாவே கொலை செய்ததும் தெரியவந்தது.

அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் அம்பிகா அந்த மூட்டையை இழுத்துச் சென்று கால்வாயில் வீசியகாட்சிகள் பதிவாகியிருந்தது போலீசாருக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது.

தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்த சந்தானம், தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அம்பிகா, கத்தியால் கணவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.

போலீசில் சிக்காமல் இருக்க, உடலை இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்த அவர், பின்னர் அதைச் சாக்குமூட்டையில் கட்டி யாருக்கும் தெரியாமல் கால்வாயில் வீசியுள்ளார். தற்போது அம்பிகாவைக் கைது செய்துள்ள போலீசார், இதுதொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.