ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறிவைத்த நடவடிக்கையைத் தொடங்கியது.

இதில், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. மேலும், பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையாக சிந்து நதி நீர் ஒப்பந்தமும் நிறுத்தி வைக்கப்பட்டது. பாகிஸ்தான் தன் எல்லையிலிருந்து பயங்கரவாத ஆதரவை நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் மூலம், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் நாடாக உலக அரங்கில் இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதத்தில் முழுமையாக மூழ்கி இருப்பதை இந்தியா வலியுறுத்தியது. மேலும், இந்தியா வழங்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா சமீபத்தில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (TRF)-ஐ தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசியல் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து தூதர் ஜேன் மாரியோட், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நிலவரம், பிராந்திய அமைதி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. போர்போக்கை தணிக்க உதவிய இங்கிலாந்துக்கு, ஷெரீப் நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தும் தயாராக  பாகிஸ்தான்  இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை  ஏற்கனவே பலமுறை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது – பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் பயங்கரவாதத்தை முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவருதல் குறித்ததாக மட்டுமே இருக்கும் என இந்தியா விளக்கம் அளித்து வருகின்றது. இந்த சூழலில், பாகிஸ்தான் மீது மேலும் சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது.