சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் இரண்டு முறை எகிறி பொதுமக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.15,200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,21,600-க்கும் விற்பனையானது. காலையிலேயே விலை இவ்வளவு ஏறிவிட்டதே என மக்கள் கலக்கத்தில் இருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் எகிறி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சற்று முன் கிடைத்துள்ள தகவலின்படி, தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.350 அதிகரித்து ரூ.15,550-க்கும், சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து ரூ.1,24,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத் தங்கம் சவரனுக்கு மொத்தம் ரூ.5,200 உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் தங்கம் விலை தாறுமாறாக எகிறி வருவதால் நகைக்கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
