தொழிற்சாலை மற்றும் குடோன்களில் இருந்து சரக்கு ரெயில்களில் சரக்குகளை ஏற்றும் மற்றும் இறக்கும் நடவடிக்கைக்காக, ரெயிலை நிறுத்தும் மற்றும் பாதை மாற்றும் கட்டணங்களை ரெயில்வே துறை ஒரு மணி நேர அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் வசூலித்து வருகிறது.

இந்த கட்டணங்கள் கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு முறையே உயர்த்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த கட்டணங்களை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கை கடந்த ஜூலை 14ஆம் தேதி ரெயில்வே வாரியத்தால் மண்டல பொதுமேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு காரணமாக, என்ஜின்களின் செயல்பாட்டு செலவுகள் கடந்த காலங்களில் தொடர்ந்து அதிகரித்திருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, எரிபொருள், பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்களுக்கு ஏற்படும் செலவுகள் இவ்வளவு உயர்வுக்கு காரணமாகும்.

புதிய கட்டண உயர்வு நேரடியாக பயணிகளை பாதிக்காது என்றாலும், சில வணிக பொருட்களின் விலையேற்றத்தில் அதன் தாக்கம் காணப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே கடந்த 1ஆம் தேதி பயணிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய நிலையில், இப்போது சரக்கு சேவைக்கான கட்டணத்தையும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.