தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ் மாநிலம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியா, ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் இந்த வளிமண்டலச் சுழற்சி, மேல் இயக்கத்துடன் பரவியுள்ளதால், ஆகஸ்ட் 8ம் தேதி வரை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல், ஆகஸ்ட் 9-ஆம் தேதி விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், புதுவையில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 10 முதல் 12 ஆம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36°C முதல் 37°C வரை இருக்கக்கூடும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°C முதல் 27°C வரை இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளையும் இதேபோல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.