சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்திய மாநிலப் பகுதிகளில் பல்வேறு வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருவதால், தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 6-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். பலத்த காற்றும் வீசலாம். 7-ஆம் தேதி வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், தென்தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும்.
மேலும், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. 8-ஆம் தேதி தமிழகத்தின் வட பகுதிகளில் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
9 முதல் 11-ஆம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இன்று (06-08-2025) சென்னை மற்றும் புறநகரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 34–35°C மற்றும் குறைந்தபட்சம் 26–27°C வரை இருக்கும். 05-08-2025 முதல் 09-08-2025 வரை, தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் 40-60 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
மத்திய மற்றும் தென்மேற்கு அரபிக்கடலிலும், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதியில் கூடுதலாக 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடியதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
