ஜார்க்கண்ட் மாநிலம் கத்சிலா தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மற்றும் மாநில பள்ளிக் கல்வி மந்திரியாக இருந்த ராம்தாஸ் சோரன் உடல் நலக்குறைவால் காலமானார். சில நாட்களுக்கு முன்பு அவர் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். “எங்களை விட்டு விட்டு நீங்கள் இப்படி சென்றிருக்கக் கூடாது ” என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து தனது வருத்தத்தை பகிர்ந்தார். மேலும், ராம்தாஸ் சோரனின் மகன் சோமேஷ் சோரனும் தந்தையின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தி ஜார்க்கண்ட் அரசியலுக்கு பெரிய இழப்பாகும் என்று கூறப்படுகிறது.