சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இண்டிகோ எயர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள துர்காப்பூர் நகரை நோக்கி புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் பயணிக்க இருந்தனர்.
விமானம் புறப்படும் முன், அதற்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை விமான ஊழியர்கள் வழங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில், விமானத்தில் பயணம் செய்த ஐஐடி மாணவர் ஒருவர், திடீரென விமானத்தின் அவசர கால வெளியேறும் கதவை திறக்கும் பட்டனை அழுத்த முயன்றுள்ளார்.
விமான ஊழியர்கள் உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு அந்த கதவை திறக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த மாணவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சென்னையில் பாதுகாப்புப் படையினர் அந்த மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் பயணிகளிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
