ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தெலுங்கு நடிகரும் நகைச்சுவைப் பேச்சாளருமான ஃபிஷ் வெங்கட் ( வெங்கட் ராஜ்) நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 53-வது வயதில் காலமானார். நீண்ட நாட்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபமாக உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டும், அவரை மீட்க முடியாத சூழ்நிலையில் , நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, “அவருக்கு முழுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டது. சிகிச்சை செலவு ரூ.50 லட்சம் வரை ஆகும் என்ற மருத்துவ ஆலோசனையால், நாங்கள் கடும் பணிச்சுமையில் சிக்கியிருந்தோம்,” எனக் கூறினர். அவரது மகளும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், “அப்பா ஐசியுவில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரை காப்பாற்ற அனைவரின் உதவியும் தேவைப்படுகிறது” எனக் கண்கலங்க கூறியிருந்தார்.
2000ஆம் ஆண்டு வெளியான பவன்கல்யாண் நடித்த ‘குஷி’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் டோலிவுட் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய ஃபிஷ் வெங்கட், தனது நேர்த்தியான நகைச்சுவை மற்றும் தனித்துவமான பாணியில் ரசிகர்களின் மனதை வென்றார். தமிழில் சிறுத்தை , மதராஸி போன்ற படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் பன்னி, அதுர்ஸ், தீ, மிராபகே உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள், திரை உலகில் அவருக்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தின.
திரைப்படங்களில் மட்டுமன்றி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நகைச்சுவை உணர்வால் மக்களிடம் பிரபலமான ஃபிஷ் வெங்கட், திடீரென உயிரிழந்தது, தெலுங்கு திரையுலகிலும், ரசிகர்கள் மத்திலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு குறித்து நடிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
