மத்தியப் பிரதேசத்தில் இருந்து இயக்கப்படும் சொம்நாத் – ஜபல்பூர் எக்ஸ்பிரஸ் (டிரைன் எண் 11463) ரயிலில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே கேட்டரிங் சேவையில் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரயில்வே சேவா (Railway Seva) தளத்தில் புகார் அளித்த பயணி ஒருவர், அதே ரயிலில் கேட்டரிங் ஊழியர்களால் தாக்கப்பட்ட அதிர்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

19 விநாடிகள் கொண்ட அந்த சிசிடிவி வீடியோவில், ஸ்லீப்பர் பெட்டியில் பயணித்த அந்த நபர் சுற்றிவளைக்கப்பட்டு, சிலர் கேட்டரிங் யூனிஃபாரம் அணிந்து இருந்தபடி அவரை தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. அவரை சுற்றியுள்ள மற்ற பயணிகள் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தபோதும், யாரும் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ முதலில் ரெடிட் (Reddit) தளத்தில் வெளியானது. அதில், “புகார் அளித்த பயணியின் PNR மற்றும் இருக்கை எண்ணை ரயில்வே சேவா, IRCTC-க்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்து, கேட்டரிங் ஒப்பந்தக்காரர் தனது பணியாளர்களை அனுப்பி தாக்க வைத்தார்” எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே சேவா தற்போது பதிலளித்துள்ளது. “தயவுசெய்து உங்கள் PNR எண்ணை அளிக்கவும்” என அவர்கள் பதில் தெரிவித்துள்ளனர். ஆனால், இது பயணிகள் தரவுப் பாதுகாப்பு மற்றும் புகாரளிக்கும் உரிமையின் மீதான மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என சமூக வலைதளங்களில் பரவலான கண்டனம் கிளம்பியுள்ளது. “புகார் அளித்தாலே தாக்கப்படுவோமா?” என்ற கோபம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே அமைச்சகம் மற்றும் IRCTC தங்கள் பணியாளர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், ரயிலில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யவேண்டிய பொறுப்பை இப்போது கேள்விக்குறியாக்கியிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட கேட்டரிங் ஒப்பந்ததாரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் அளித்த பயணியின் PNR விவரங்களை வெளிப்படுத்தியவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்பு குறித்து புதிய கலந்துரையாடலுக்குத் துவக்கமாயுள்ளது.