கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் ஹலியால் பகுதியில் சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு மங்களவாடி கிராமத்தை சேர்ந்த மனோகர் என்ற வியாபாரியின் மகனான ஓம் கதம் (13) என்ற சிறுவன், அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு வந்த பின்னர் செல்போன் மீது முழுமையான அடிமை தன்மை காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஓம் கதம் வீடு திரும்பியதும், தனது பழக்கப்படி செல்போனில் முழுமையாக மூழ்கிய நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்த தந்தை மனோகர், ஆத்திரம் அடைந்து செல்போனை பறித்து விட்டு, சிறுவனை கடுமையாக கண்டித்துள்ளார்.

அதனால் மனமுடைந்த ஓம் கதம், வீட்டில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்ளிருந்து பூட்டியுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் வெளியே வராததை பார்த்த தந்தை, கதவை உடைத்துப் பார்த்தபோது, அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததைக் கண்டுள்ளார்.

உடனே தகவலறிந்த ஹலியால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனின் செல்போன் பழக்கம் மற்றும் அதனைத் தடுக்க பெற்றோர் எடுத்த நடவடிக்கை, இறுதியில் தற்கொலையில்  முடிந்த பெற்றோர்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது,  இந்தசம்பவம் தொடர்பாக ஹலியால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.