இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’ ஆகிய புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, திரையில் தோன்றி மக்கள் மனங்களைக் கவர்ந்த கிராமியப் பாடகி லட்சுமி அம்மாள் (82), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த இவர், வறுமை வாட்டிய போதும் தனது கலைப் பயணத்தை இறுதி வரை கைவிடாமல் தொடர்ந்தவர். அவரது மறைவு நாட்டுப்புறக் கலை உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இவரது மறைவுக்குத் திரையுலகினரும், நாட்டுப்புறக் கலைஞர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்