அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் தனது டுரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அந்த வீடியோவில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஒவல் அலுவலகத்தில் அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு (FBI) அதிகாரிகளால் கைதுசெய்யப்படுகிறார் போலவும், பின்னர் சிறை உடையில் கம்பிகளுக்குள் நிற்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் டிரம்ப் சிரித்துக்கொண்டே பார்த்து மகிழ்வது போல் காட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ கற்பனையாக இருந்தாலும், டிரம்ப் அதைப் பற்றி எந்தவித விளக்கமும் வழங்கவில்லை. மேலும், “யாரும் சட்டத்திற்கு மேல் அல்ல” என்ற கருத்தையும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 2016 தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பின்னணியில் இவ்வாறு ஒபாமாவை சிறையில் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.
இதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. டிரம்ப் பொறுப்பற்ற நடத்தை மேற்கொள்கிறார் என்றும், இதுபோன்ற வீடியோக்கள் மக்கள் மனதில் தவறான புரிதலை உருவாக்கும் என்றும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது போலியான வீடியோ என அறிவிப்பு இல்லாமல் வெளியிடப்படுவது, அரசியல் நம்பிக்கைகளையும் பொது விவாதங்களையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
