மதுரையில் தனது மனைவிக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுக்க கணவன் மேற்கொண்ட முயற்சி பெரும் விபத்தில் முடிந்தது. பயிற்சியின் போது, காரை நிறுத்த பிரேக் பிடிப்பதற்கு பதிலாக, எதிர்பாராதவிதமாக அவர் ஆக்சிலேட்டரை பலமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், கண் இமைக்கும் நேரத்தில் அருகில் இருந்த தெப்பக்குளத்தின் தடுப்புச் சுவரை மோதி உடைத்துக்கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தது.
இந்தத் திடீர் விபத்தைக் கண்டு அப்பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும் விபத்துக்குள்ளான கார் பின்னர் கிரேன் உதவியுடன் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. முறையான பயிற்சிப் பள்ளிகள் மூலம் கார் ஓட்டக் கற்றுக்கொள்வதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
