தமிழகத்தில் கோடை வெயில் சதமடித்து வரும் நிலையில், பொதுமக்களுக்குப் பொது சுகாதாரத்துறை ஒரு முக்கியமான மற்றும் அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கோடை வெயிலால் யாராவது மயக்கம் அடைந்தாலோ அல்லது உடல் சூடாகிச் சோர்வடைந்தாலோ, அதனைச் சாதாரண காய்ச்சல் என்று நினைத்து ‘பாராசிட்டமால்’ (Paracetamol) அல்லது ‘ஆஸ்பிரின்’ (Aspirin) மாத்திரைகளை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, பாராசிட்டமால் மாத்திரைகள் மூளையில் உள்ள வெப்ப கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் காய்ச்சலைக் குறைக்கும். ஆனால், கோடையில் ஏற்படும் ‘வெப்பவாதம்’ (Heat Stroke) என்பது வெளிப்புறச் சூட்டினால் உடல் வெப்பம் அதிகரிப்பதாகும்.
இந்தச் சூழலில் பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொண்டால், அது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவாது என்பதுடன், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான பக்கவிளைவுகளையும், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
