மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது குறித்து எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்’ பெயரை, ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் – கிராமப்புறம்’ (VB-GRAMJI) என மத்திய அரசு மாற்றியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “காந்தியின் பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும்” என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், இந்தப் பெயர் மாற்றம் குறித்து திமுக எடுத்து வரும் நிலைப்பாட்டை விமர்சித்தார். அவர் பேசியதாவது: “100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றிவிட்டதாக திமுக கூறி வருகிறது. அத்தோடு வேலையையும் நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார்கள். திட்டத்திற்கு என்ன பெயர் இருந்தால் என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? எங்களுக்குச் சோறு கிடைத்தால் போதும்.

காந்தி பெயரை வைத்தால் என்ன அல்லது ராமர் பெயரை வைத்தால் என்ன? பெயரில் ஒன்றுமில்லை, திட்டம்தான் முக்கியம். மக்களுக்கு வேலை கிடைக்கிறதா என்பதுதான் பார்க்க வேண்டிய விஷயம் என்றார்.

மேலும் திமுகவைச் சாடிய அவர், “முன்பு இந்திரா காந்தியைக் கல்லால் அடித்தவர்கள் திமுகவினர். இப்போது திடீரென காந்தி மேல் அவர்களுக்குப் பாசம் வந்துவிட்டது. எங்களுக்குத் தேவை காந்தியின் பெயரல்ல, ஏழை மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புதான்,” எனத் தெரிவித்தார். மத்திய அரசின் பெயர் மாற்றத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், சி.வி. சண்முகத்தின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.