கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங், ‘காந்தாரா’ படத்தில் வரும் பூத கோலா தெய்வ வழிபாட்டை மேடையில் நடித்துக் காட்டி, அத்தெய்வத்தைப் ‘பெண் பேய்’ என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் துளு மக்களின் கலாச்சாரத்தையும், மத உணர்வுகளையும் புண்படுத்தியதாகக் கூறித் துளு அமைப்புகளிடமிருந்தும், சமூக வலைதளங்களிலும் ரன்வீர் சிங்கிற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது மேடையில் இருந்த நடிகர் ரிஷப் ஷெட்டி அதைக் கண்டிக்காமல் சிரித்ததற்கும் கண்டனங்கள் எழுந்தன.
துளு சமுதாயத் தலைவர்கள், ரன்வீர் சிங் மற்றும் ரிஷப் ஷெட்டி இருவரும் கத்ரி மஞ்சுநாதா கோயிலுக்கு வந்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
அதில், “ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பைப் பாராட்டுவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
