தெலங்கானா மாநிலத்தில், காதலில் ஏற்பட்ட தோல்வியால் 22 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட தனது மகனுக்கு, அவனது பெற்றோர் தற்போது திருமணச் சடங்குகளை நடத்தியுள்ள நெகிழ்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, தான் விரும்பிய பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அந்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் திருமண வயதில் மகன் மறைந்தாலும், அவனுக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்த அந்தப் பெற்றோர், தங்கள் குல வழக்கப்படி மரணத்திற்குப் பின் செய்யப்படும் இந்த வினோத திருமணச் சடங்கை தற்போது முன்னின்று நடத்தியுள்ளனர்.
இந்தச் சடங்கின் ஒரு பகுதியாக, இதேபோல் இளம் வயதிலேயே உயிரிழந்த ஒரு பெண்ணின் உருவ பொம்மையுடன், உயிரிழந்த அந்த இளைஞனுக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, உற்றார் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அனைத்து பாரம்பரிய சடங்குகளும் கடைபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் தங்கள் மகன் ஆசைப்பட்டது போலவே ஒரு திருமண வாழ்வு அவனுக்கு ஆன்மா ரீதியாக கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும், குடும்பத்தில் நிலவும் சில தோஷங்கள் நீங்கும் என்ற எண்ணத்திலும் இந்த விசித்திரமான ஆனால் பாசப் போராட்டமான காரியத்தைச் செய்ததாக அந்தப் பெற்றோர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.
