பிகார் மாநிலம் ககாரியா பகுதியில் போலி ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்ததாகக் கூறப்படும் மணீஷ் குப்தா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போலீஸாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மணீஷ் குப்தாவின் வீட்டில் டெஸ்லா கார் ஒன்று இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், 20 கிரெடிட் கார்டுகள், 4 காசோலைப் புத்தகங்கள் மற்றும் 5 செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இவ்வளவு பொருள்கள் ஒரே இடத்தில் சிக்கியிருப்பது விசாரணை அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே, அவரது வீட்டில் பாராசிங்கா எனப்படும் இரலைமானின் இரண்டு கொம்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை எவ்வாறு அவரது வீட்டுக்கு வந்தன என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொம்புகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரச்னைக்குரியவையா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.
போலி ஐஏஎஸ் அதிகாரியாக மணீஷ் குப்தா எவ்வாறு செயல்பட்டார், அவருக்கு பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டெஸ்லா கார், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்ட பொருள்களின் மூலமும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
