பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில் அழுகிய தக்காளி மற்றும் ஆபாசப் புகைப்படங்கள் அடங்கிய பார்சல்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நெதர்லாந்து நாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 42 வயதான மார்டின் விஷ்ணு பிரசாத் என்ற அந்த நபர், விமான நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில் இந்த விசித்திரமான பார்சல்களை வீசிச் சென்றுள்ளார். துப்புரவுப் பணியாளர்கள் இதனைக்கண்டு அதிகாரிகளுக்குப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதனால் விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனக்கு வரவிருக்கும் ஒரு பெரிய ஆபத்து அல்லது ‘துரதிர்ஷ்டத்தைத்’ தவிர்ப்பதற்காகவும், தன் மீதான திருஷ்டியைக் கழிக்கவும் இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் நெதர்லாந்தில் வசித்து வரும் இவர், ஒரு ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் இந்த வினோதமான சடங்கைச் செய்ததாகத் தெரிகிறது. இருப்பினும், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டது மற்றும் பீதியை ஏற்படுத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து பாஸ்போர்ட் மற்றும் இதர ஆவணங்களைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.