மும்பையின் விக்ரோலி பகுதியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. மனீஷா சரடே என்ற இளம்பெண் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 24 அன்று, மனீஷாவின் சகோதரி உஷா காண்டரேவுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஒரு புகைப்படம் வந்தது. அந்தப் புகைப்படத்தில் மனீஷா இறந்த நிலையில் இருப்பது போல் தோன்றியது.
புகைப்படத்தைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த மனீஷாவின் குடும்பத்தினர் உடனடியாக விக்ரோலி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இதையடு்த்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மனீஷா உயிருடன் இருப்பது தெரியவந்தது. அவர் கல்வா பகுதியில் ஒரு இளைஞருடன் வசித்து வந்ததாக காவல்துறை கண்டறிந்து கடும் முயற்சிக்குப் பிறகு மனீஷாவையும் உடன் இருந்த இளைஞரையும் கைது செய்தனர்.
தற்போது காவல்துறை மனீஷாவிடம் விசாரணை நடத்தி வருகிறது. அவர் ஏன் தனது இறப்பு பற்றிய தவறான தகவலைப் பரப்பினார் என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. விசாரணைக்குப் பிறகு, மனீஷாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்யும். ஆனால், மனீஷாவுடன் இருந்த இளைஞர் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
