காட்டு விலங்குகளின் வேட்டை மற்றும் ஆக்ரோஷமான வீடியோக்களுக்கு மத்தியில், ஒரு குட்டி காண்டாமிருகத்தின் சுட்டித்தனமான விளையாட்டு வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனங்களை வென்று வருகிறது.

பொதுவாகக் காண்டாமிருகங்கள் என்றாலே ஆக்ரோஷமானவை என்ற பிம்பம் உண்டு. ஆனால், வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு குட்டி காண்டாமிருகம், தன்னை விட உருவத்தில் பெரிய காட்டு மாடு (Wildebeest) ஒன்றை வம்புக்கு இழுக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைப் புன்னகைக்க வைக்கின்றன.

(X) தளத்தில் @NatureUnedited என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த 28 விநாடி வீடியோவில்: காட்டின் திறந்தவெளியில் வரிக்குதிரைகள் மற்றும் காட்டு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது திடீரென ஒரு குட்டி காண்டாமிருகம் துள்ளிக் குதித்து வந்து, அங்கு நின்றிருந்த காட்டு மாட்டைப் பயமுறுத்த முயற்சிக்கிறது. முதலில் திடுக்கிட்ட அந்த மாடு, சில அடிகள் பின்வாங்குகிறது. ஆனால், வந்திருப்பது ஒரு குட்டிதான் என்பதைப் புரிந்துகொண்ட அந்த மாடு, அமைதியாக விலகிச் செல்கிறது. விடாமல் துரத்திய குட்டி காண்டாமிருகம், சிறிது நேரத்தில் ஓடிச் சென்று தனது தாயின் பின்னால் ஒளிந்துகொள்கிறது. அப்போதுதான் அந்த காட்டு மாடு நிம்மதி அடைகிறது.

சுமார் 88,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 5,000-க்கும் மேற்பட்டோர் விருப்பம் (Like) தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒரு பயனர், “குட்டி காண்டாமிருகம் தன்னுடன் விளையாடுகிறது என்பதை அந்த மாடு புரிந்து வைத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “காண்டாமிருகக் குட்டியின் தன்னம்பிக்கையை வளர்க்க அந்த மாடு வழிவிடுவது அழகாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் விலங்குகளின் குணாதிசயங்களை விளக்கும் இந்த காணொளி, தற்போது இணையத்தின் ‘ஹாட் டாப்பிக்’ ஆக மாறியுள்ளது.