பெண்களால் மிக எளிதாகச் செய்ய முடிந்து, ஆண்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் சில உடல் ரீதியான பயிற்சிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தம்பதிகள் சிலர் இணைந்து ஒரு குறிப்பிட்ட உடல் சமநிலை (Balance) சவாலை மேற்கொள்கின்றனர். அதில் பெண்கள் மிக லாவகமாகச் செய்யும் அந்தப் பணியைச் செய்ய முடியாமல், ஆண்கள் நிலைகுலைந்து கீழே விழுவது வேடிக்கையாகப் படமாக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
தரையில் மண்டியிட்டு அமர்ந்து, முழங்கைகளைத் தரையில் ஊன்றி, தலையை உள்ளங்கைகளில் தாங்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, சமநிலை மாறாமல் ஒவ்வொரு கையாக எடுத்து முதுகுக்குப் பின்னால் கட்ட வேண்டும். இந்தச் சோதனையின் போது, பெண்கள் அசையாமல் அப்படியே இருக்கும் வேளையில், ஆண்கள் கைகளை எடுக்கும் அடுத்த நொடியே நிலைதடுமாறி முகம் குப்புறத் தரையில் விழுகின்றனர்.
இந்த வீடியோ “ஆண்களால் இதில் வெற்றி பெற முடியாது என்பது உண்மையா?” என்ற கேள்வியுடன் பகிரப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் இரண்டு விதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்:
இது முற்றிலும் அறிவியல் பூர்வமானது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பெண்களின் ஈர்ப்பு மையம் (Center of Gravity) அவர்களின் இடுப்புப் பகுதிக்கு அருகில் உள்ளது. ஆனால், ஆண்களுக்கு இந்த மையம் தோள்பட்டை மற்றும் மார்புப் பகுதிக்கு அருகில் உள்ளது. இதனால்தான் முன்னோக்கி குனியும் போது பெண்களுக்கு அதிக நிலைத்தன்மை (Stability) கிடைப்பதாகவும், ஆண்களால் சமநிலையைப் பராமரிக்க முடிவதில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு தரப்பினர், “ஆண்கள் சரியான இடைவெளி மற்றும் நிலையைப் பின்பற்றாததே தோல்விக்குக் காரணம்” என்கின்றனர். ஒரு பெண் பயனர் குறிப்பிடுகையில், தனது கணவர் இந்தச் சவாலை மிக எளிதாகச் செய்து முடித்ததாகப் பதிவிட்டுள்ளார்.
விளையாட்டாகத் தொடங்கினாலும், மனித உடலின் உடற்கூறியல் வேறுபாடுகளை இந்த வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக இணையவாசிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
