காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி.) சங்கர் கணேஷை கைது செய்து கைது வாரண்ட் பிறப்பித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த உத்தரவை வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதாகக் கூறி, மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை நேரடியாகச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு போலீஸ் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதி என். சதீஷ்குமார் முன்னிலையில் வழக்குத் தொடரப்பட்டபோது, அரசு தரப்பில் ஆஜராகிய வக்கீல்,

“மாவட்ட நீதிபதி செம்மலுக்கும் டி.எஸ்.பி. சங்கர் கணேஷுக்கும் இடையில் முன்பே தனிப்பட்ட விரோதம் உள்ளது. அதனால் பழிவாங்கும் நோக்கில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” என வாதிட்டார். வாதங்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய, அவர்மீது உள்ள வழக்கின் மேலான விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து நீதிபதி செம்மல், காஞ்சீபுரமிலிருந்து அரியலூர் லோக் அதாலத் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், உயர்நீதிமன்ற ஒழுக்க நடவடிக்கை குழுவின் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து, நீதிபதி செம்மலுக்கு பணியிடை நீக்கம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தீர்மானம், நீதித்துறையிலும் நிர்வாகத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.