நடிகர் மற்றும் நடன இயக்குநரான ராகவா லாரன்ஸ் தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் இணையக்கூடும் என்ற பேச்சுக்கள் பலமாக அடிபடுகின்றன. லாரன்ஸ் நீண்ட காலமாக நடிகர் ரஜினிகாந்த் மீது கொண்டுள்ள தீவிர பற்று மற்றும் அண்ணாமலைக்கும் ரஜினிகாந்த் தரப்பிற்கும் இடையே உள்ள சுமுகமான உறவு ஆகியவற்றை மையமாக வைத்தே இந்த அரசியல் கூட்டணிக்கான ஊகங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்நிலையில், அண்ணாமலை மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவருக்கும் ரஜினிகாந்த் தனது ஆதரவை வழங்கியுள்ளார் என்று பரவி வரும் தகவல்களுக்கு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்தவொரு அரசியல் கட்சியோ, அமைப்போ தங்களுடைய ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவரின் இந்த உத்தரவை ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.