சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகே 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய புகாரில் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மீது ஏற்கனவே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் காவல்துறையினர் உரிய மேல் நடவடிக்கை எடுக்கத் தவறியதே, அவர் தற்போது இத்தகைய மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலில் ஈடுபடுவதற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது, ஆலந்தூரில் கணவனை இழந்து தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மற்றும் தூத்துக்குடியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது போன்ற அடுக்கடுக்கான சம்பவங்களை வரிசைப்படுத்தியுள்ளார். தற்போது 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியுள்ள சம்பவம் வரை, பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என்றும் விமர்சித்துள்ளார். எனவே, கைதான தவெக நிர்வாகியை தீர விசாரித்து, இதன் பின்னணியில் செயல்பட்ட கொடூர மனம் படைத்த அனைவரையும் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான உளவியல் ரீதியான உதவிகளை உடனடியாக வழங்கிட வேண்டும் எனவும் தமிழக அரசை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
