அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தனது விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “திமுகவை அழிக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட அதிமுக, இன்று தனது சுயத்தை இழந்து நிற்கிறது” என்று வேதனை தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் எழும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும், தவறைத் தட்டிக்கேட்கவும் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இன்று யாரும் தங்களை நோக்கிக் கேள்வி கேட்கக் கூடாது என்ற சர்வாதிகாரப் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் சாடினார்.

அண்மைய தேர்தல் படுதோல்விகளை கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ள நிலையிலும், இபிஎஸ் அதனைப் பொருட்படுத்தாமல் இருப்பதால், அதிருப்தியில் பலரும் கட்சியை விட்டு விலகிச் செல்கின்றனர் என்றும், அப்படிச் செல்பவர்களைத் துரோகி என்று சொல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

மேலும், அதிமுக தலைமை தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள மறுப்பதாகக் குற்றம் சாட்டிய சி.வி.சண்முகம், தொடர் தோல்விகளுக்குப் பொறுப்பேற்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருவதாகக் குறிப்பிட்டார். தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காகவே இபிஎஸ் நாடகம் நடத்தி வருகிறார் என்று சாடிய அவர், கடந்த தேர்தலில் பாமக கூட்டணி மட்டும் இல்லையென்றால் சேலத்தில் கூட  எடப்பாடி பழனிசாமி தட்டுத்தடுமாறி, மிகவும் சிரமப்பட்டுத்தான் வெற்றி பெற்றிருப்பார் என்றார்.

மேலும் பாமக உடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் வடமாவட்டங்களில் அதிமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது. 47 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாமக போட்ட பிச்சை. இல்லையெனில் 7 இல்லை 8 தொகுதியில்தான் அதிமுக வென்றிருக்கும். மேலும் கனவு உலகத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி வெளியே வரவேண்டும் எனவும் தயங்காமல் பொதுக்குழு அல்லது செயற்குழுவை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.