கேரள மாநிலத்தை சேர்ந்த ரெனீஸ் என்பவர், தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து ஒரு புதுமையான ‘சைக்கிள் கேரவனில்’ காஷ்மீர் வரை நெடிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். சூரிய ஒளி மின்சக்தியில் இயங்கும் இந்த வாகனத்தில் சமையல் அடுப்பு மற்றும் படுக்கை வசதிகள் என ஒரு சிறிய வீடே அடங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த ஜனவரி 6-ம் தேதி பத்தினம்திட்டாவில் தொடங்கிய இந்த பயணத்தை கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். ஒரு நாளைக்கு சுமார் 30 கி.மீ வரை செல்லும் இந்த வாகனத்தில் சார்ஜ் குறைந்தால் காலால் பெடல் செய்தும் இயக்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.

இந்தியாவின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டையும், பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் நேரில் அறிந்து கொள்வதே இவர்களது பயணத்தின் முக்கிய நோக்கமாகும். கன்னியாகுமரி வழியாக திண்டுக்கல் மாவட்டத்தை வந்தடைந்த இந்த வினோத சைக்கிளை மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.

பகலில் பயணம் செய்யும் இவர்கள், இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து வாகனத்திலேயே உறங்கி விடுகின்றனர். எளிய முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் மூலம் சமூக மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ரெனீஸ் குடும்பத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.