ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர், தனது உணவகத்தில் ஏற்பட்ட மின்கசிவு விபத்தில் 65% தீக்காயமடைந்தார். உள்ளூர் மருத்துவமனையில் உடல்நிலை தேறாததால், அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
கடும் பண நெருக்கடியிலும், எப்படியாவது அவரைப் பிழைக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில், சஞ்சய்யின் மனைவி அர்ச்சனா தேவி உறவினர்களிடம் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஒரு தனியார் ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்தார்.
திங்கள்கிழமை மாலை ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கிப் புறப்பட்ட அந்த விமானம், கிளம்பிய 20 நிமிடங்களிலேயே மோசமான வானிலை காரணமாக வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் நோயாளி சஞ்சய், அவரது மனைவி அர்ச்சனா, ஒரு உறவினர், மருத்துவர், செவிலியர் மற்றும் இரண்டு விமானிகள் என மொத்தம் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கணவரைக் காப்பாற்றப் போராடிய மனைவியும் அவருடனேயே விபத்தில் பலியானது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
