சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரு சம்பவத்தில், விமானத்தில் தான் பணம் செலுத்தி முன்பதிவு செய்த ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஒரு குடும்பம் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளது. அங்கிருந்த ஒரு சிறுவன் அந்த இருக்கை வேண்டுமென்று அடம் பிடித்தபோது, அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தனது குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக, அந்தப் பெண்ணை அனுமதியின்றி வீடியோ எடுத்து, அவரை அவமானப்படுத்தும் நோக்கில் இணையத்தில் பதிவிட்டுள்ளது அந்தச் சிறுவனின் குடும்பம். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையதளவாசிகள் அந்தப் பெண்ணை மோசமாக விமர்சிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் நிறுவன அதிகாரிகளும் அந்த வீடியோவைப் பார்க்க நேரிட்டதால், அவர் தனது வேலையையும் இழந்துள்ளார்.

​தற்போது அந்தப் பெண், தனது தனியுரிமையை மீறியதற்காகவும், வேலையை இழக்கக் காரணமாக இருந்ததற்காகவும் அந்த விமான நிறுவனம் மற்றும் அந்தச் சிறுவனின் குடும்பத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். “தான் முறைப்படி வாங்கிய இருக்கையை விட்டுக்கொடுக்கவில்லை என்பது ஒருவரின் வேலையைப் பறிக்கும் அளவுக்குச் சென்றிருப்பது பெரும் அநீதி” எனப் பலரும் அந்தப் பெண்ணிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஒருவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்து அவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்துவது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. பண இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள அந்தப் பெண், நீதிமன்றத்தின் மூலம் உரிய நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் போராடி வருகிறார்.