காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மத்திய காசாவில் உள்ள நீர் விநியோக மையத்தில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
அதில் 8 குழந்தைகள் இருப்பது பெரும் சோகத்துக்கிடமான செய்தியாகும். மேலும், காசா நகர சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 11 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேபோல், தெற்கு காசாவில் கடலோரத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான கூடாரங்கள் மீது விமானம் தாக்கியதில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை, அமெரிக்க ஆதரவு நல உதவிப் பொருட்கள் விநியோக மையம் அருகே மக்கள் உணவிற்காக காத்திருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தகவலை மறுத்து, எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு தான் நடத்தினோம், யாரும் காயமடையவில்லை என கூறியுள்ளது.
இந்த தாக்குதல்களின் மத்தியில், அமெரிக்கா முன்மொழிந்த 60 நாள் போர்நிறுத்த திட்டத்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர பல நாட்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், அதுவும் தோல்வியடைந்துள்ளது. காசாவில் தற்போது வரை 58,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக அங்கு உள்ள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது வரை இல்லாத அளவுக்கு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் இது குறித்து கவலையை தெரிவித்து வரும் நிலையில், காசா பகுதியில் நிலவும் பேரழிவு இன்னும் தொடரும் நிலையிலேயே இருக்கிறது.
