கேரள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான ‘இந்திரா பவன்’ வளாகத்தில், மூத்த தலைவர் ஒருவரின் செயல் பெண் சட்டமன்ற உறுப்பினரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேபிசிசி தலைமையகத்தில் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கொல்லம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிந்து கிருஷ்ணா வருகை தந்தார். அவர் அங்கிருந்த தலைவர்களை இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண்டே அலுவலகத்திற்குள் நுழைய முயன்றார்.

அப்போது அங்கிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் செரியன் பிலிப், திடீரென பிந்து கிருஷ்ணாவை கட்டிப்பிடிக்க  முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிந்து கிருஷ்ணா, உடனடியாக அவரைத் தள்ளிவிட்டு அங்கிருந்து நகர முயன்றார். அதன் பின்னரும் செரியன் பிலிப் விடாமல் அவர் அருகே செல்ல முயன்றதும், அதனைத் தவிர்த்துவிட்டு பிந்து கிருஷ்ணா விலகிச் சென்றதும் அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது.

 

தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையிலேயே நடந்த இந்தச் சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் தர்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பொது இடங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதை மற்றும் தனிமனித இடைவெளி குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

“ஒரு பெண் பிரதிநிதியின் உடல்மொழியே அவருக்கு அந்தச் செயலில் உடன்பாடு இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியும், மூத்த தலைவர் அப்படி நடந்தது கண்டிக்கத்தக்கது” எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கேரள அரசியல் களம் ஏற்கனவே பல்வேறு விவாதங்களால் சூடாக இருக்கும் நிலையில், கட்சியின் தலைமையகத்திலேயே ஒரு பெண் தலைவருக்கு ஏற்பட்ட இந்தச் சங்கடம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மேடைகளிலும் அலுவலகங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலுப்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.