கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நடுரோட்டில் முன்னாள் மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற நபரை, அங்கிருந்த இளைஞர்கள் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதனாயகனஹள்ளியில் இந்த அதிதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சஞ்சய் என அடையாளம் காணப்பட்ட நபர், தனது முன்னாள் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீண்ட நாட்களாக ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை மறித்த சஞ்சய், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரெனக் கொலை வெறியுடன் தாக்க முயன்றார்.
#Shocking incident in #Bengaluru.
A man identified as Sanjay allegedly tried to #attack his ex-wife with a knife in the middle of the road. Alert youngsters overpowered him & rescued the woman. Madanayakanahalli Police are probing.@timesofindia pic.twitter.com/5rR4eo6sqa
— TOI Bengaluru (@TOIBengaluru) May 7, 2026
பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்த வாகன ஓட்டிகளும் இளைஞர்களும் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். கத்தியுடன் பாய்ந்த சஞ்சயை, அங்கிருந்த இளைஞர்கள் ஒருமித்தமாகச் சேர்ந்து மடக்கினர். ஒரு கட்டத்தில் சஞ்சயிடமிருந்து கத்தியைப் பிடுங்கிய இளைஞர்கள், அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சஞ்சயைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுரோட்டில் ஒரு பெண் ஆபத்தில் சிக்கியபோது, வேடிக்கை பார்க்காமல் உடனடியாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞர்களின் துணிச்சலான செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். “சரியான நேரத்தில் இளைஞர்கள் தலையிடவில்லை என்றால் மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
