பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கேரள வியாபாரிகளை மிரட்டி ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் மகேஷ் கனககிரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்ற 4 பேர் கொண்ட கும்பல், தங்களை காவல்துறை என அடையாளப்படுத்தி, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில், விடுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், கொள்ளையர்கள் பயன்படுத்தியது சி.ஐ.டி. ஆய்வாளர் மகேஷ் கனககிரிக்குச் சொந்தமான அரசு வாகனம் என்பதை உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்திற்கு மகேஷ் கனககிரி மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. கேரள வியாபாரிகள் பணத்துடன் வந்ததை முன்கூட்டியே அறிந்த அவர், தனது கூட்டாளிகளை அனுப்பி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்டது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மகேஷ் கனககிரி தலைமறைவானார். இந்நிலையில், தனிப்படை போலீஸார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, தலைமறைவாக இருந்த மகேஷ் கனககிரி மற்றும் அவரது கூட்டாளிகளான குபேந்திர ரெட்டி, வசந்த் குமார் உள்ளிட்ட 5 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.