தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், கோவில் நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, “அடிப்படை கழிவறை வசதிகள் கூட இல்லாத ஒரு கோவிலில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங் (அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்) அமைக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை நோக்கி அவர் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினார். கோவில் நிதி என்பது பக்தர்களின் வசதிக்காகவும், ஆன்மீகப் பணிகளுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தற்காப்பு வாதம் செய்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, குன்னூர் விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும், அந்தந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாயை ஈட்டும் நோக்கிலுமே செயல்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “பக்தர்கள் கோவிலுக்கு வருவது அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்யத்தானே தவிர, கார் பார்க்கிங் வசதிக்காக அல்ல” என்று சாடினார். இந்த விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முக்கிய ஆன்மீகத் தலங்களுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த இத்தகைய நவீன பார்க்கிங் வசதிகள் இன்றியமையாதவை என்றும், அதனைத் தேவையற்றது என நிராகரிக்க முடியாது என்றும் வாதிட்டதால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.