சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். “தமிழ்நாட்டில் விலை நிலவரத்துக்குப் பதிலாக, கொலை நிலவரம் கேட்கும் அவல நிலை தி.மு.க. ஆட்சியில் உள்ளது. போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக் என அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தி.மு.க.வில் ஊழல் வழக்கில் உள்ள அமைச்சர்கள் பத்திரமான இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கள்ளச்சாராய வழக்கு, அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவற்றில் சி.பி.ஐ. விசாரணையைக் கண்டு தி.மு.க. அரசு பயப்படுவது யாரையோ காப்பாற்றுவதற்காகத்தான் என்றும் கேள்வி எழுப்பினார்.

​அ.தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. கள்ள ஓட்டுக்களால் வெற்றி பெற்றதால் தான், தற்போது ‘SIR’ (வாக்காளர் தீவிர திருத்தம்) என்றாலே அலறுவதாகவும், வாக்காளர் தீவிர திருத்தத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், தி.மு.க. கூட்டணி அமைத்தால் பா.ஜ.க. நல்ல கட்சி என்றும், அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் மதவாத கட்சி என்றும் பேசுவது ஏன் எனவும் கேட்டார்.

அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்ததால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் விமர்சித்தார். தி.மு.க. ஒரு ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும் சாடினார். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்று பெருமிதம் தெரிவித்த அவர், தைத்திருநாளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹5000 வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்திப் பேசினார்.