முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், அந்த வாக்குச்சாவடியில் தி.மு.க.வுக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதலமைச்சரே வகுத்துக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், டெல்லியை நோக்கி ஒரு ஆவேசமான சவால் விடுத்துள்ளார். ​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “எந்த ‘ஷா’ வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்!” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். இதன் மூலம், வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆதிக்க முயற்சிக்குத் தமிழகம் அடிபணியாது என்பதை அவர் அழுத்தமாக உணர்த்தியுள்ளார்.