தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 6 மாதக் குழந்தையை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த நகேஷ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சுஜாதா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனை நகேஷின் மனைவி மமதா கண்டித்ததோடு, சுஜாதாவுடனான உறவை கைவிடுமாறு தனது கணவரை வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, மமதா உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக இருக்க முடியாது எனக் கருதி அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
மேலும் சம்பவத்தன்று நகேஷ் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுஜாதா, மமதாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மமதா தனது 6 மாத ஆண் குழந்தைக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்தபோது, மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர்கள் இருவர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் உடல் கருகி அலறிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய சுஜாதாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
