நடிகர் விஜய் தனது சினிமா பயணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ வரும் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையே 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளிலும் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

விஜய்யை தான் முதலில் ஆதரித்ததாகவும், ஆனால் அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தற்போது சந்தேகமாக இருப்பதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

விஜய் வெறும் நடிகராக மட்டும் இல்லாமல், எம்.ஜி.ஆர் போல மக்களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடினால் மட்டுமே ஒட்டுமொத்த நாடும் அவர் பின்னால் நிற்கும் என்று அவர் கூறினார்.

விஜய் ஒரு சிறந்த நடிகர் என்பதால் மக்கள் அவர் மீது அன்பாக இருக்கிறார்கள் என்றும், அவர் அரசியலுக்கு வருவதையோ ஆட்சியைப் பிடிப்பதையோ தான் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் அவர் மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராட வேண்டும் என்றும் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார்.